ரசனை

இன்று காலை முதலே எனக்குள்ளே உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய நெடுநாளைய ஆசை நிறைவேறி இருக்கிறது. அருகிலிருந்த நகரத்தைத் தாண்டி வேறெங்கும் சென்றிராத நான் இன்றைக்கு சென்னையை அங்குலம் அங்குலம் அங்குலமாய் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.



உயரமான கட்டிடங்கள், அகலமான சாலைகள், கூட்டமான பேருந்துகள் என எத்தனையோ விஷயங்கள் ரசிக்கும்படி இருந்தாலும், நான் அதிகம் ரசித்தது ஒரே ஒரு விஷயத்தைத் தான். அதுதான் இங்கே இருக்கும் பெண்கள். 

அழகழகாய், விதம் விதமாய், ரகம் ரகமாய்ப் பெண்கள். இவர்களைப் பார்க்கக் கோடி கண்கள் வேண்டும். ஆனால் எனக்கிருப்பதோ இரண்டு. இந்த இரண்டு கண்களை வைத்துக் கொண்டு கோடி கண்களின் வேலையைச் செய்வது சிரமம்தானே? ஆனால் நான் அதையும் சிறப்பாகச்செய்து கொண்டிருந்தேன்.

நான் இன்றைக்கு என் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிற எத்தனை பேரை மறுபடியும் பார்க்க முடியும்? அதனால், நான் பார்க்கிற ஒவ்வொரு பெண்ணையும் ஒரு நொடியில் ஸ்கேன் செய்து என்னுடைய இதயத்தில் பதிவு செய்து கொண்டிருந்தேன். பிறகு, சாவகாசமாய், ஒவ்வொன்றாய், அங்குலம் அங்குலமாய் அசை போட்டுக் கொள்ளலாம்.

நான் பார்ப்பது குறித்து எந்தப் பெண்ணும் எந்தவிதமான வருத்தமோ, கவலையோ கொள்வதாகத் தெரியவில்லை. இதே என் ஊரென்றால், நிச்சயம் ஒரு செருப்படியோ, அல்லது காறித் துப்பலோ நடந்திருக்கும். அதனால் தான் என்னுடைய ஊரில் எந்தப் பெண்ணையும் நான் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. ஆனால் இங்கே அந்தப் பிரச்சினை எதுவும் இல்லை.

நீங்கள் ஒரு பெண்ணைப் பார்ப்பதால் அதிகபட்சம்  அவளுக்கு என்ன ஆபத்து வந்து விடும்? ஒன்றும் இல்லை. ஆனால் அவர்கள் செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

அதிலும் திருமணமான பெண்கள், நீங்கள் அவர்களைப் பார்த்ததும், மாராப்பை சரி செய்வார்கள். அந்தச் செய்கை ' இங்கே இருப்பதையும் கொஞ்சம் பார்' என்று சொல்வது போல இருக்கும்.

நான் இப்படியெல்லாம்  சொல்வதால்  நீங்கள் என்னைத் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவையெல்லாம், என்னுடைய சீனியர்களுக்கும், நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள். 

இது போன்ற மோசமான அனுபவங்களால் பீதியுற்று நான் நல்ல பிள்ளையாகவே இருப்பது என முடிவு செய்து விட்டேன்.

கல்லூரிக்குச் சென்ற பின் இதைப்போன்ற விஷயங்களில் இருந்து சுதந்திரம் கிடைக்கும் என்று பார்த்தால் அந்த ஆசையிலும் மண் விழுந்து விட்டது.

நான் படித்த கல்லூரியில் ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி வகுப்புகள் என்பதோடு, கல்லூரி வளாகத்தில் ஒருவரையொருவர்  சந்திக்கக் கூடத் தடை இருந்தது.

அவர்களைப் பார்க்க வேண்டுமென்றால் கல்லூரி விழாக்களில் தான் பார்க்க முடியும். அதுவும், நிகழ்ச்சி துவங்கும் சில நிமிடங்களுக்கு முன் தான் அவர்கள் அழைத்து வரப்பட்டு முன் வரிசைகளில் அமர வைக்கப்பட்டு விடுவார்கள்.

நாங்கள் வெளியே அவர்களை சந்திக்க நினைத்தால் அதற்கும் ஒரு சிக்கல். அவர்கள் நேரமும் எங்கள் நேரமும் வேறு வேறு. அதையும் தாண்டி தங்களது சாகசங்களை நிகழ்த்தியவர்கள் இந்தக் கதைக்கு அப்பாற்பட்டவர்கள்.

இப்படியெல்லாம் சங்கடங்களை நான் சந்தித்து வந்ததால், சென்னையின் சுதந்திரம் என்னை சிலிர்க்க வைத்தது. 

இதையெல்லாம்  பார்த்துக் கொண்டிருந்த என்னுடன் இருந்தவன் என்னை முறைத்துக் கொண்டிருந்தான்.

அவன் என்னுடன் பயணம் செய்வதை நான் விரும்பவில்லை. ஆனால், இது எனக்கான முதல் நெடுந்தூரப் பயணம் என்பதால் என் தந்தை செய்த ஏற்பாடு இது.

அவன் அவரது நண்பரின் மகன். என்னுடைய ரசனைக்கு முற்றிலும் மாறுபட்டவன். அவன் எந்தப் பெண்ணையும் பார்க்கவில்லை என்பது கூடப் பரவாயில்லை. என்னையும் அவனைப் போல இருக்கச் சொன்னது தான் எனக்குப் பிடிக்கவில்லை.

கல்லூரியின் இறுதிச் சான்றிதழை சென்னையில் பதிவு செய்வதற்கான பயணம் இது. பதிவினை முடித்துவிட்டு திரும்புவதற்கு பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம்.

பசியோடு இருந்தவனுக்கு ஃபுல் மீல்ஸே கிடைத்ததைப் போல நான் அனைத்தையும் ரசித்து முடித்தேன். அப்போதுதான் நான் அவளைப் பார்த்தேன்.

அவள் என்னோடு பேருந்துக்குக் காத்திருப்பவர்களுல்  ஒருத்தியாக இருந்தாள். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்க்கும் தோரணையில் அவள் சிறிது நேரமாகவே என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

இப்போது நான் என்ன செய்வது என எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. ஒரு பெண் என்னை இதுவரை நேருக்கு நேராய்ப் பார்த்தது இல்லை. எனவே அவளது பார்வையை என்னால் எதிர்கொள்ள இயலவில்லை.

மறுபடியும் நான் அவளைப் பார்த்த போதும் அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் வேகமாக அவளிடம் இருந்து என் பார்வையை விலக்கிக் கொண்டேன்.

ஏதேனும் ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையாவது என் மீது படாதா என ஏங்கியிருக்கிறேன். அதற்காகப் போடாத குட்டிக் கரணங்கள்  கிடையாது.

கல்லூரி விழாவில் நாடகங்கள் போட ஆரம்பித்தோம். அதன் மூலம் பிரபலம் ஆகி பெண்களைக் கவர திட்டம். அப்படிப்பட்ட பிரபலம் காரணமாக மற்றவர்கள் பலன் அடைந்தார்களே தவிர எனக்கு எந்தப் பயனும் இல்லை.

தனித்து நின்று பெர்ஃபார்மன்ஸ் காட்ட முடிவெடுத்து, கவிதைகள் எழுதினேன். அவைகளில் சிறந்தவற்றை மேடைகளில் வாசித்தும் கூட எந்தப் பலனும் இல்லாமல் போகவே, கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என விட்டுவிட்டேன்.

இப்படி ஏங்கி ஏங்கியே என் கல்லூரிப் படிப்பு முடிந்து விட, இதற்கு மேலும் எனக்கு ஏதேனும் உருப்படியாய் நடக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது.

இன்றைய தரிசனங்களில் என் உள்ளம் போதுமான அளவு குளிர்ந்து விட்ட பிறகும் அதற்கும் மேலே ஒரு வாய்ப்பு, விடுவேனோ?

நான் அந்தப் பெண்ணை கவனித்தேன். அவள் ஒரு வேளை என்னைத் தாண்டி வேறு யாரையும் பார்க்கிறாளா? அப்படி எதுவும் தெரியவில்லை.

ஒரு வேளை அவள் போலீசாகவோ அல்லது விபச்சாரிகவோ இருக்கலாமோ என யோசித்தால் அதற்கும் வாய்ப்பில்லை. அப்படியென்றால், அந்தப் பெண் என்னை ஏன் அப்படி பார்க்கிறாள்?

அவள் என் மீது விருப்பம் கொண்டு தான் என்னைப் பார்க்கிறாள். ஒரு வேளை விருப்பம் இல்லாமல் கூடத்தான் பார்க்கட்டுமே அதற்கு என்ன ? ஒரு பெண்ணே என்னை கூச்சமில்லாமல் நேருக்கு நேர் பார்க்கும்போது, நான் எதற்கு யோசிக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல், நான் யோசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் பொன்னானது. எந்த நேரத்திலும் நான் போக வேண்டிய பேருந்தோ அல்லது அவள் போகும் பேருந்தோ வந்து விடலாம்.

நான் போகும் பேருந்து வந்தால் அதை விட்டு விட்டு நான் அவளை ரசித்துக் கொண்டே நிற்கலாம். அவளது பேருந்தை விட்டு விட்டு எனக்காக நிற்பாள் என்பது என்ன நிச்சயம்? அப்படியே இருவரும் நின்றாலும் எவ்வளவு நேரம் நிற்க முடியும். எனவே நான் உடனடியாக ஒரு முடிவெடுக்க வேண்டும்.

நானும் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அவள் அதை எதிர்பார்க்கவில்லை போலும், முதலில் லேசாக ஜெர்க் ஆனவள், மறுபடியும் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

நான் உலகத்தையே மறந்து அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க, என் வழித்துணை நண்பன் மிகுந்த ஆச்சர்யத்துடன்  என்னையும்  அவளையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது. அந்தப் பெண் தனக்கு அருகில் இருந்த ஒரு நடுத்தர வயது பெண்ணை அழைத்து என்னைக் காட்டினாள். அந்தப் பெண்ணும் என்னைப் பார்த்தார். பின்னர் அந்த நடுத்தர வயதுப் பெண் என்னைப் பார்த்து ஏதோ சொல்லி விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

நான் ஒருக்கணம் அதிர்ந்து விட்டேன். அந்த நடுத்தர வயது பெண்ணை நான் இவ்வளவு நேரம் கவனித்து இருக்கவில்லை. அவர்களது முக ஜாடையையும், வயதையும் வைத்துப் பார்க்கும்போது, இருவரும் அம்மா மகள் போலத் தெரிந்தது.

மறுபடியும் அவள் என்னைப் பார்த்தாள். நான் பயத்தில் இருந்தேன். இந்த முறை அவள் என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள். நான் உஷாரானேன். 

சொந்த ஊருக்குள் நல்ல விதமாய் இருந்து விட்டு, இங்கு வந்து அடி வாங்குவதிலோ, அசிங்கப் படுவதிலோ எனக்கு விருப்பமில்லை. மேலும், என் பயணத்துணையோ என்னை நிறைய தடவை எச்சரித்து விட்டான். நான் அவற்றையெல்லாம்  நிராகரித்து விட்டேன். எனக்கு நிகழப் போகும் அசம்பாவிதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.

அந்த நடுத்தர வயது பெண்மணியுடன் ஒரு வாட்டசாட்டமான ஆள் பேசிக் கொண்டிருந்தான். அவன் அவர்களுக்கு ஏதோ வாங்கி வர சென்றான்.

அவர்கள் இருவரும் மறுபடியும் ஒருவருக்கொருவர்  என்னைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டார்கள். பின்னர் என்னை நோக்கி வந்தனர். இந்தப் பக்கம் திரும்பப் பார்த்தால் என் வழித்துணையைக் காணோம். விபரீதம் புரிந்து கொண்டு நழுவி விட்டான்.

இதை நானே தான் எதிர்கொள்ள வேண்டும். இவ்வளவு நேரம் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருந்தவள் தன் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். நான் ஒரேயடியாக இல்லவே இல்லை என சாதிப்பது என முடிவெடுத்தேன்.

ஆனால், அவர்கள் என்னிடம் வந்து " ஏம்ப்பா பாக்க டீசன்டா இருந்துட்டு ஏன் இந்த மாதிரி வேலயெல்லாம் பண்றே " எனக் கேட்டால்தான் சங்கடம். எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியதுதான்.

அந்த நடுத்தர வயதுப் பெண் என்னிடம் ஒரு ஊர்ப் பெயரைச் சொல்லி "தம்பி, நீங்க அந்த ஊரா?" என்றாள். எனக்குப் பாதி உயிர் வந்தது. அவர்கள் சொன்னது என் ஊர்ப் பெயர்தான். "ஆமாம்" என்றேன்.

அவர்கள் முகம் மலர்ந்தது. என் முகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன? 

" நாங்களும் அந்த ஊருதான் " இது அம்மா.

" அப்படியா. நான் அந்த ஊருன்னு எப்படிக் கண்டுபுடிச்சீங்க" இது நான்.

" உங்க பையில ஊர் பேர பாத்தேன். அதுதான் எப்படிக் கேக்குறதுன்னு ரொம்ப நேரமா யோசிச்சிட்டிருந்தோம்." இது அவள்.

"அடிப்பாவிகளா " என்று என்னால் உரக்கச் சொல்ல முடியவில்லை. இப்போது போன உயிர் திரும்ப வந்துவிட்டது. நான் உற்சாகமாய் அவளிடம் கேட்டேன்.

" எந்த காலேஜ் " 

அவள் சொன்னாள்.

"நானும் அதே காலேஜ் தான் " என்றேன்.

ஒரே கல்லூரியில் படித்தும் முகம் தெரியாதவர்கள்  போல முகம் தெரியா ஊரில் அறிமுகம் நிகழ்வது சோகம் தானே. அதுவும் நல்லது தான் என்றாள் அவளின் அம்மா.

என் பெயரைச் சொன்னவுடன் " கவிதைல்லாம் படிக்கறது நீங்கள் தானா?" என்று உற்சாகமாய்க் கேட்டாள்.

என்னை அவள் உருவத்தில் இல்லாவிட்டாலும் பெயரால் நினைவில் வைத்திருந்தாள்.

"உங்கள பத்தி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்"

"என்னைப் பத்தியா? நிறையவா?"

" ஆமாம். நம்ம ஆர்.கே. சார் உங்கள பத்தி நெறய சொல்லியிருக்குறார். நீங்க டாப்பிக் சொன்னவுடனே கவிதை எழுதுவீங்களாம். உங்களோட கவிதை காம்பிடீஷனுக்கு போனால் ஜட்ஜஸ் எல்லாம் அரண்டுறுவாங்களாமே"

இப்படி ஆரம்பித்தவள் என்னைப் பற்றி நானே அறியாத பலவற்றை எங்களது ஆர்.கே. சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது நண்பிகளுக்கெல்லாம்  கூட என்னை ரொம்பவும் பிடிக்கும் என்றும் சொன்னாள். அவர்களுக்காவது என்னை நேரில் பார்த்தால் தெரியுமா எனக் கேட்கலாம் எனத் தோன்றியது.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்று கொண்டிருந்தேன். தூரத்தில் இருந்து அந்த வழித்துணைவன் எங்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அந்த வாட்டசாட்டமான ஆள் அவர்கள் இருவருக்கும் கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்தான். அவளது அக்காவின் கணவனாம். அந்த ஆளுக்கு என்னை அறிமுகப்படுத்தினார்கள். அந்த ஆள் எனக்கும் சென்று கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்தான்.

அவர்கள் நேராக ஊருக்கு வரப்போவதில்லை என்றும் அவளது அக்கா வீட்டில் தங்கிவிட்டு வரப் போவதாகவும் சொன்னாள்.

அவர்களுக்கான பேருந்து வந்து அவர்கள் ஏறிச் சென்று விட்டார்கள். நான் அந்த திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

" தப்பா நெனச்சிக்காதீங்க.  நீங்க யாருன்னு தெரியாம உங்கள பாத்துக்கிட்டு நின்னேன். உங்க கிட்ட மிகப் பெரிய தெறம இருக்கு. அத சரியான முறையில யூஸ் பண்ணி நீங்க பெரிய ஆளா வரனும். இந்த மாதிரி சில்லற விஷயங்கள்ல கான்ஸன்ட்ரேட் பண்ணி உங்க திறமையையும், லைஃபையும் வேஸ்ட் பண்ணிக்காதீங்க."

அவள் செல்வதற்கு முன் யாரும் பார்க்காத நேரத்தில் எனது இரண்டு கைகளை பிடித்துக் கொண்டு சொன்னது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

" போயிட்டாங்களா.அவங்க யாரு தெரிஞ்சவங்களா" என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.அங்கே எனது வழித்துணை நின்றிருந்தான்.

கருத்துகள்