இடுகைகள்

மழையும் நீயும்

 மழையில் நனைந்திருக்க நீயோ விரும்புகிறாய்- உன் மடியினில் விழுந்திருக்க நானோ நெருங்குகிறேன் மழையின் பயனாய் விளைந்த நெருக்கம் வாழ்வில் கிடைக்குமா வண்ணக்கிளியே மழையின் துளிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைக்குமா அன்னக்கிளியே

நீ வருவாயென

கனவாயவள் நுழைந்தாலதில் விழியாலதை மொழிந்தாளென துயிராயவள் இணைந்தானபின் எனதாயவள் இருந்தாள் தொலைவாய் நானிருந்தேனவள் நினைவாலெனை மறந்தேனவள் விரைவாயெனை அடைவாயுடன் வருவாயென மொழிந்தாள் நீ வருவாயென இருந்தேனென உரைத்தாள் விழிநனைத்தாளெனில் உடனேயதை உணர்ந்தானபின் விரைந்தே ஊரடைந்தேன் விழியாலெனை அளந்தாளவள் உடலாலவள் நெளிந்தானபின் மனாதளவள் மகிழ்ந்தாளென தாருயர் மனையாள்

அதிகாலைப் பயணம்

அதிகாலைப் பயணத்தில் உனை நானும் சந்தித்தேன் அழகாலே மதி மயங்கி சில நிமிடம் நின்றிட்டேன் அதன் பின்னர் உனைத் தேடி தினந்தோறும் வந்தேன் நீ தந்த அமுதத்தை அன்போடு தின்றேன் பல நேரம் அழகாலே தாலாட்டினாய் சில நேரம் ஏனென்னை ஏமாற்றினாய்? அதனாலே எனக்குள்ளே சில நேரம் வருத்தம்  உனைக் காணல் பல பேரின் கண்களையும் உறுத்தும் இருந்தாலும் இதற்கெல்லாம் வருந்துபவன் நானல்ல உனைக் காணும் பொழுதெல்லாம் எனக்கென்றும் வீனல்ல உனைக் காணும் நாளெல்லாம் எனக்கென்றும் வரமாகும் இதுவன்றோ இப்புவியில் நான் செய்யும் தவமாகும் எனக்காக தினந்தோறும் உனைக் காட்டிக் கொள்ளும் வைகறை மேகமுந்தன் வடிவென்னைக் கொல்லும்

மோகனப் புன்னகை

உன் விழிக்குளத்தில் நான் எனைத் தொலைத்தேன் நீ உருக்குலைத்து என்னை அலைக்கழித்தாய் உன் உதட்டசைவில் நான் உணர்விழந்தேன் நீ பதற்றமின்றி என்னை பருகிவிட்டாய் உன் கூந்தலுக்குள் நான் விரல் கொடுத்தேன் உன் கூச்சத்தினால் என்னை குளிர வைத்தாய் உன் பெண்மையின் மென்மையை அனுபவித்தேன் அதைக் கொண்டு நீ என்னை வென்று விட்டாய் நீ மோகனப் புன்னகை பரிசளித்தாய் அதில் மொத்தமாய் நானும் தொலைந்து போனேன்

வேரோடியக் காதல்

விதையானது மண்ணில்  விழுந்தாலது முளைக்க வாய்ப்பானது கிடைக்கும் அதுபோன்றது காதல் உறவாயது நிலைக்க வழியானது பிறக்க முயன்றாலது முடியும் இலையேலது மடியும் கனவாயது இருந்தால் கனவானதை கொணர்ந்தால் அவளானவள் மகிழ்வாள் உடனேயவள் இணைவாள் உடலாலதை அறிந்தால் உடனேயதை உணர்ந்தால் நெடுநாளதை தொடர வழிகாணுதல் அரி்தாம் விதையிலது தொடங்கும் நெடுநாளது நிற்கும் அதன்பேரெது வென்றால் வேரோடியக் காதல் மலிவானது அல்ல விலைபோவது மல்ல நினைவோடதை கொண்டால் உடனேயதை அடைவாய்

கைவளையல் சத்தமிட

கைவளையல் சத்தமிட கால்விரலோ கோலமிட காத்திருந்தேன் மாமனுக்கு வேறுதுணை யாரெனக்கு ராப்பொழுது தூக்கமில்ல எப்பொழுதும் ஏக்கமுள்ள எம்மனச புரிஞ்சிக்கிட மாமனுக்கு நேரமில்ல அத்திப்பழம் போலிருக்கும் அத்தமவ ரத்தினத்த அள்ளி அனைச்சிடத்தான் அத்தானுக்கு அன்புமில்ல ஒடிஒடி ஒழைக்கத்தான் ஒடம்புக்குள்ள தெம்பிருக்கு என்னப்போல பொம்பளைக்கு ஒடம்புக்குள்ள மனசெதுக்கு ஒறவுவிட்டுப் போகாதுன்னு ஒறவுக்குள்ள பொண்ணெடுத்து எனக்கெனவே ஆனமச்சான் எ(ன்) உசுரு உனக்குத்தான் ஊருக்கெல்லாம் உத்தமனா இருக்குறது தப்பில்ல எனக்குங்கூட மனசிருக்கு ஏ(ன்) ஒனக்கு தெரியல்ல ஒனக்குத்தான் வாக்கப்பட்டேன் வேறென்ன நா(ன்)கண்டேன் ஒருவார்த்த எனப்பாத்து சிரிச்சுநீயும் பேசறியா படுக்கத்தா(ன்) நா(ன்)வேணும் பசிச்சாலும் நா(ன்) வேணும் - உ(ன்) ஒறவுக்கெல்லாம் வக்கனையா வடிச்சுப்போட நா(ன்) வேணும் எடுத்த எடுப்புக்கெல்லா(ம்) எரிஞ்சுவிழ நா(ன்) வேணும் வயக்காட்டு வேலைக்கெல்லாம் ராப்பகலாநா(ன்) வேணும் எனக்கன்ன வேணுன்னு என்னைக்காச்சும் கேட்டதுண்டா ஒடம்புக்கு முடியலன்னா ஒருநாளும் ஓய்வுண்டா இத்தனையும் கேக்கனுன்னு ஒவ்வொருநாள் நெனச்சதுண்டு மனசுக்குள்ள கோவமாக வருத்தப்பட்டு ...

குப்பைக் கவிதைகள்

கவிதை எனச்சொல்லி - நீ எழுதுவதெல்லாம் கவிதையல்ல குப்பையென்று சிலபேர் என்னிடம் சிரித்தபடி சொன்னார்கள் ஆகா அற்புதம் எனச்சொல்லி நன்றி சொன்னேன் அவர்களிடம் என்னவெனப் புரியாமல் முழித்தார்கள் மறுபடியும் என்னை பழித்தார்கள் உங்கள் விமர்சனங்கள் என்னை ஊக்குவிக்கும் என்றால் வரவேற்கும் முதல் மனிதன் நானாயிருப்பேன் நான் எழுதுவதை தடுத்திடத்தான் விமர்சனம் செய்வதெனில் புறந்தள்ளிப் போவேன் அதிலென்ன கரிசனம் தமிழெனக்கு தாய் மொழியோ தந்தை மொழியோ அல்லவெனி்னும் என்னை வென்ற மொழி அறிவைத் தந்த மொழி அந்த மொழி என்னுள்ளே தந்த மொழிப் புலமையிலே எழுதுகிறேன் நாளும் அந்தப் புகழ் என்னையல்ல என் தமிழைச் சாரும் என்றேனும் ஒர் நாள் நான் எழுதுவதாலே தனக்கிழுக்கு வந்ததென்று தமிழ் மொழியும் சொல்லட்டும் அதுவரையில் நானும் அலுக்காமல் எழுதிடுவேன் என் வரிகளிலே என்னுள்ளே இருப்பதை நான் பதிவிடுவேன்