இன்று காலை முதலே எனக்குள்ளே உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய நெடுநாளைய ஆசை நிறைவேறி இருக்கிறது. அருகிலிருந்த நகரத்தைத் தாண்டி வேறெங்கும் சென்றிராத நான் இன்றைக்கு சென்னையை அங்குலம் அங்குலம் அங்குலமாய் ரசித்துக் கொண்டிருக்கிறேன். உயரமான கட்டிடங்கள், அகலமான சாலைகள், கூட்டமான பேருந்துகள் என எத்தனையோ விஷயங்கள் ரசிக்கும்படி இருந்தாலும், நான் அதிகம் ரசித்தது ஒரே ஒரு விஷயத்தைத் தான். அதுதான் இங்கே இருக்கும் பெண்கள். அழகழகாய், விதம் விதமாய், ரகம் ரகமாய்ப் பெண்கள். இவர்களைப் பார்க்கக் கோடி கண்கள் வேண்டும். ஆனால் எனக்கிருப்பதோ இரண்டு. இந்த இரண்டு கண்களை வைத்துக் கொண்டு கோடி கண்களின் வேலையைச் செய்வது சிரமம்தானே? ஆனால் நான் அதையும் சிறப்பாகச்செய்து கொண்டிருந்தேன். நான் இன்றைக்கு என் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிற எத்தனை பேரை மறுபடியும் பார்க்க முடியும்? அதனால், நான் பார்க்கிற ஒவ்வொரு பெண்ணையும் ஒரு நொடியில் ஸ்கேன் செய்து என்னுடைய இதயத்தில் பதிவு செய்து கொண்டிருந்தேன். பிறகு, சாவகாசமாய், ஒவ்வொன்றாய், அங்குலம் அங்குலமாய் அசை போட்டுக் கொள்ளலாம். நான் பார்ப்பது குறித்து எந்த...