விபரீத விளையாட்டு
" ஏண்டா இந்த விபரீத விளையாட்டு " என்றான் அவன்.
"இதுல என்ன விபரீதம் " என்றேன்.
" நீ கதையெல்லாம் எழுதுனா யாரு படிக்கறது?"
" யாரும் படிக்கனும்னு அவசியமில்ல" என்றேன்.
" அப்படின்னா ஆபத்தில்ல."
" அப்படில்லாம் சொல்ல முடியாது. கொஞ்சம் ஆபத்தும் இருக்கிறது."
" யாருக்கு?"
" உனக்குத்தான். ஏனென்றால் நான் எழுதப் போவது உன் கதையை."
" ஹா....... ஹா ...... என் கிட்ட என்ன கதை இருக்குது?"
" காதல் கதை. கல்லூரிக் காதல்."
அவன் சற்று யோசித்தான். இது கொஞ்சம் விபரீதம் தான் என உணர்ந்திருந்தான்.
"ஆமாம். உன் பெயரைப் போட்டே எழுதப் போகிறேன். உன் மனைவி படித்தால் அவ்வளவுதான் "
" அவள் படிக்க மாட்டாள் "
"ஏன்?"
"அவளுக்கு படிக்கத் தெரியாது"
" என்னடா சொல்ற?"
" அவள் படிச்சது தெலுங்கு அதனால அவ படிக்க முடியாது"
" நானே வந்து படிச்சு காட்டுவேன்"
" ஏன் சுத்தி வளைச்சி கதையெல்லாம் எழுதி சொல்லனும்? நேர்ல வந்தே சொல்லிடேன்."
"அதுல கொஞ்சம் சுவாரஸ்யம் கம்மி"
" அப்போ நானும் உன்னப் பத்தி போட்டுக் கொடுத்தால்... ..?"
" அது ஆபத்தில்ல. ஏன்னா என்னோட அரைகுறை காதல்கள் எல்லாத்தையும் நான் என்னோட வீட்ல கல்யாணமான புதுசு லயே சொல்லியாச்சு."
" எல்லா பொண்டாட்டிகளும் ஆபத்தானவங்க இல்ல. ஆனா சில பொண்டாட்டிங்க ரொம்ப ஆபத்தானவங்க " என்று சொல்லி சிரித்தான். நானும் சிரித்தேன்.
அதன் பிறகு சிறிது நேரம் வேறு விஷயங்கள் பேசி விட்டு இணைப்பை துண்டித்தேன்.
என்னுடைய பேனாவை எடுத்து இப்போது எழுதத் தொடங்குகிறேன். அவன் பெயரையே தாங்கி தொடங்கும் கதையின் உண்மை நாயகன் நான் தான் என்பது, என்னையும் அவனையும் தவிர, நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கூட கேட்டுக் கொண்டிருந்த, என் மனைவிக்கு கூட தெரியாது.
#குறுங்கதை
கருத்துகள்
கருத்துரையிடுக