பெண்ணின் மனதைத் தொட்டு

 இரவு நேர இரயில் பயணம் தனக்கு எத்தகைய ஆபத்தினை ஏற்படுத்தும் என்பதை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. அவள் தீர்மானமாக இருந்தாள். தன்னைப் பற்றியோ, தான் மேற்கொண்டுள்ள பயணம் பற்றியோ வாய் திறக்கவில்லை.

அவள் வீட்டில் உடுத்துகிற உடையுடன் வந்திருந்தாள். மாற்றுத் துணி மட்டுமல்ல, கையில் பணம் கூட ஒரு பைசா இல்லை. ஆனால் அவளது மனவுறுதி தான் அவளுக்கு என்னை அறிமுகப் படுத்தி இருக்கிறது. அவள் சென்னைக்குத் தான் செல்ல வேண்டுமென்று சொன்னதாலும் என்னுடன் வருவதற்கு உடன்பட வில்லை என்பதாலும் அவள் சென்னையில் யாரோ நம்பிக்கையானவர்களைத் தேடித்தான் பயணம் போகிறாள் என்பது தெரிந்தது. 

அவளுக்கு நான் டிக்கெட் எடுத்துக் கொடுத்தேன். செலவுக்குப் பணம் கொடுத்தேன். இரண்டையும் அவள் மறுக்கவில்லை. ஆனால் ஒரு மனசாட்சியுள்ள மனிதனாக அவளுக்கு ரயில் டிக்கெட் வாங்கித் தருவதோடு மட்டும் என் கடமை முடிந்து விட்டது என இருந்து விட முடியவில்லை. ஒரு நம்பிக்கையான பயணத்துணையை அவளுக்குத் தேடித்தர நான் முனைந்த போது தான், அவளும் நானும் அவனைச் சந்தித்தோம்.

*******

வானத்தில் பறப்பது போல நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? நான் உணர்ந்திருக்கிறேன். பெரும்பாலும் என்னுடைய கனவுகளில் தான் அத்தகைய உணர்வு ஏற்படும். ஆனால் அன்றைக்கு நான் உண்மையிலேயே வானத்தில் பறந்தேன்.

ஒரு உணர்வை அப்படியே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீட்டிக்க முடியுமா? முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்னுடைய அந்த உணர்வை அப்படியே அனுபவித்துக் கொண்டே இருந்திருப்பேன்.

ஆனால், அதற்கென்று ஒரு நேரம் இருக்கும் தானே, அந்த அளவு நேரம் கூட என்னால் அந்த உணர்வில் லயித்திருக்க முடியவில்லை. அதற்கு நேர் மாறான உணர்வை நான் அனுபவிக்க வேண்டிய சூழல் என்றால் அது கொடுமை தானே?

என் வாழ்வில் கொடுமை என்பது எப்போது ஆரம்பித்தது என எனக்கு நினைவில்லை. ஆனால், நினைவு தெரிந்த நாள் முதல் ஏதேனும் ஒரு விதத்தில் ஒவ்வொரு நாளும் கசப்புணர்வை நான் அனுபவித்து வருகிறேன்.

அதனால் இப்போது கசப்பு பழகி விட்டது. ஆனாலும் என்னுடைய வாழ்க்கையில் கசப்புக்கு மறு பக்கமும் உண்டு. அதையும் நான் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

இவ்வளவு தத்துவம் பேசும் எனக்கு அறுபது வயதிருக்கும் என்று நீங்கள் கணித்தீர்கள் என்றால் அது தவறு. என் வயது பதினாறு தான். அதிலும் நான் ஓர் பெண்.

பெண்ணாகப் பிறந்தவர்களுக்கென்றே நிறைய சங்கடங்கள் இருக்குமல்லவா? அந்தச் சங்கடங்களெல்லாம்  எனக்கும்  உண்டு. அதையெல்லாம் உணர்வதற்கு உங்கள் வீட்டில் ஒரு ஆண் பிள்ளை இருக்க வேண்டும்.

எங்கள் வீட்டில் ஆண் பிள்ளை உண்டென்பதால்  எனக்கு நடக்கும் பாரபட்சங்களையெல்லாம்  நான் உணர்ந்திருக்கிறேன். ஆனாலும் அவைகளெல்லாம் என்னை பாதிக்காமல் நான் விலகி நிற்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்  சுதந்திரத்தில்  நான் எதைச் சாதிக்க முடியுமோ அதைச் சாதிக்கிறேன்.

எதையும் சிறப்பாக செய்வது என்பது எனது இயல்பு, பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி. அந்த இயல்புதான் என்னை மற்றவர்களிடமிருந்து  விலக்கிக்  காட்டுகிறது.

அந்த இயல்பு என் வீட்டில் யாருக்கும் இல்லாதது. அதனாலேயோ என்னமோ அந்த இயல்பின் மூலம் நான் அடைகின்ற பலன்களை அவர்களால் ரசிக்க முடிவதில்லை.

என் தம்பியை வேண்டுமானால் சிறு பிள்ளை என்று விட்டு விடலாம். ஆனால் என் பெற்றோர் ? 'உங்கள் பெண்ணுக்குக் கிடைக்கும் பெருமைகளை, பாராட்டுகளை, வெற்றிகளை ஊரே கண்டு வியக்கும் போது, நீங்கள் மட்டும் ஏன் மெளனமாய் இருக்கிறீர்கள்?' என்று நான் கேட்கலாம்தானே? ஆனால் முடியாது.

நான் செய்கின்ற செயல்களிலும், பேசுகின்ற ஒவ்வொரு பேச்சிலும் குற்றம் கண்டுபிடிப்பவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? எனவே, நான் அதையெல்லாம் ப்எதிர்பார்ப்பதில்லை. இவர்களுக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கிறது. அது என்னை இவர்களுக்கும் சேர்த்து தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.

 அன்றொரு நாள் என் பள்ளி விழாவில் என் தமிழாசிரியர் சிறப்பாகப் பேசினார். அதை நான் மிகவும் ரசித்தேன். அவரிடம் நான் பேசிய போது என்னாலும் அது போலப் பேச முடியும் என்றார். பள்ளி நூலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் நான் சிறப்பாகப் பேசுவதற்கு சுயமாகப் பயிற்சி செய்தேன்.

என்னுடைய தலைமை ஆசிரியர் முன் பேசுவதற்கு நான் பயந்த போது, அவர் என்னிடம் "நான் யார்?" எனக் கேட்டார். "எச்.எம்." என்றேன். "இல்லை. நான் ஒரு முட்டாள் " என்றார். நான் அதிர்ந்தேன். "என்னை முட்டாளாக எண்ணாத வரையில் உன்னால் சிறப்பாகப் பேச முடியாது" என்றார்.

'தலைமை ஆசிரியரே முட்டாள் என்றால், மற்றவர்களெல்லாம் .........?' இந்தக் கேள்விக்கான விடையில் என்னை சிறப்பான பேச்சாளினியாக்க வேண்டும் என்ற அவரின் உத்தி எனக்குப் புரிந்தது. என் முன்னேற்றத்திற்காக, தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்  கூட தயங்காத அவரின் அன்பினால் எனது பேச்சின் வீச்சு அதிகரித்தது.

இப்படித்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதரும் என்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் என் எல்லைகள் விரிந்து போய்க் கொண்டே இருக்கிறது.

அன்றைக்கு என் பள்ளியில் ஓர் விழா. வந்திருந்தவரைப் பற்றி என் ஆசிரியர்கள் ஆஹா ஒஹோ எனப் புகழ்ந்தார்கள். மிகச் சிறந்த பேச்சாளர்களில் அவர் ஒருவர் என அறிந்தேன்.

நான் பேசி முடித்த போது இருக்கையில் இருந்து எழுந்து கை தட்டிய அவர், தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை எடுத்து வந்து எனக்கு அணிவித்து, பாராட்டிப் பேசினார்.

" இந்த வயதில் இவ்வளவு சிறப்பாகப் பேசுவது என்பது அரிது. இதை விட சிறப்பாக என்னால் பேச முடியாது என்பதால், இந்தப் பெண்ணின் பேச்சையே விழாவின் சிறப்புரையாக அறிவிக்கிறேன்" என்றார்.

அதன் பிறகு நடந்தது அனைத்தும் ஒரு கனவைப் போல இருந்தது. எல்லோரும் பாராட்டினார்கள். தெரிந்தவர், தெரியாதவர், பிடித்தவர், பிடிக்காதவர், என பேதமின்றி எல்லோரும் பாராட்ட, முதல் முறையாக நான் விழித்திருக்கும் போதே வானத்தில் பறந்தேன்.

அதை ஒவ்வொரு முறை நினைக்கும் போதும், என்னுடைய வார்த்தைகள் நின்று போகிறது. சில நிமிடங்கள் என்னால் எதுவும் பேச முடியாமல், உணர்வுகள் என்னை ஆட்கொண்டு விடுகிறது. 

என்னவொரு அற்புதமான உணர்வோடு வீடு திரும்பினேன். வீட்டில் உள்ளவர்கள் யாரும் என்னை அங்கீகரிக்கமாட்டார்கள் என அறிந்திருந்தேன். ஆனால் ......... ஆனால்... ...

நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்ல வேண்டும் அல்லவா? அப்போது தானே நான் திருத்திக் கொள்ள முடியும்? காரணமே இல்லாமல், எதுவுமே சொல்லாமல் பிரம்பால் அடி பின்னினால் என்ன அர்த்தம்?

"எதுக்காக என்ன அடிக்கிறீங்க?" என்று ஆவேசமாக வந்த வார்த்தைகளை என் அழுகை விழுங்கி விட்டது. என்னுடைய உணர்வுகள் மரத்து அப்படியே ஒரு ஜடம் போல உணர்ந்தேன்.

அன்று இரவு வெகுநேரம் உறங்காமல் என் அம்மாவும் பாட்டியும் பேசிக் கொண்டிருந்ததில் எதுவும் புரியவில்லை என்றாலும் இரண்டு விஷயங்கள் திரும்பத் திரும்ப கேட்டது. "சண்டாளியே வந்து பொறந்திருக்கா?"   " அந்த சண்டாளன் வந்துட்டானே"

**********

எனக்குப் புல்லரித்தது. எத்தனை வருடங்கள் என்றெல்லாம் கூட நினைவில் இல்லை. இதோ நான் படித்த பள்ளிக்கு நான் சிறப்பு விருந்தினனாய் வந்திருக்கிறேன் என்றால் எவ்வளவு சிறப்பு. 

அன்றைக்கு வகுப்பறைகள் பற்றாக்குறையால் புளிய மரநிழலிலும், கோயில் முகப்புகளிலும் நான் கற்ற கல்வி தான் இன்றைக்கு எனக்கு மதிப்பினை சம்பாதித்துத் தந்திருக்கிறது.

என்னை வளர்த்த அய்யாவும், நான் பயின்ற ஆசிரியர்களும் யாரும் இன்றைக்கு இல்லை. அவர்கள் பேர் சொல்லும் பிள்ளை நான் இருக்கிறேன்.

என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை. நான் அந்தப் பள்ளியின் வளாகத்தை அங்குலம் அங்குலமாய் ரசித்துக் கொண்டிருந்தேன்.

எவ்வளவோ நினைவுகள் என்னுடைய நினைவலைகளிலிருந்து வந்து என்னைத் தாலாட்டிய போதும், நான் எந்தவொரு நினைவை என் நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து தூக்கி எறிந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்தேனோ, அந்த எண்ணங்களை நோக்கி என் மனம் படிப்படியாய் என்னை அழைத்துச் சென்றது.

நான் அவளோடு பழகிய நாட்கள் என் கண் முன்னே காட்சியாய் விரிந்து கொண்டிருந்தது. அன்றைய சூழலும் காட்சிகளும் அப்படியே என்னால் காண முடிந்தது. என் கண் முன்னே அவளும் நானும் கபடமில்லா பிள்ளைப்பருவத்தில் உற்சாகமாய் திளைத்துக் கொண்டிருந்தோம்.

அந்தக் காட்சிகள் என்னை வழிநடத்திச் செல்ல நான் காட்சிகளின் பின்னே நடந்து சென்றேன். என் கண்களை என்னால் எப்படி நம்ப முடியவில்லையோ, அதே போல என் கண் முன்னே நிகழ்வதையும் என்னால் தடுக்க முடியவில்லை.

நான் உடனடியாய் அதிலிருந்து தப்பித்து என்னுடைய தங்கும் அறைக்கு வந்து விட்டேன். என் முன்னே நடந்த காட்சிகள் நின்று விட்டாலும் பழைய நினைவுகள் மட்டும் நீங்காமல் இருந்தது.

நானும் அவளும் இங்கே படித்த நாட்களில் எங்களின் அந்நியோன்யத்தை பார்த்து அனைவரும் வியப்பார்கள். அவளும் நானும் எங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தான் பழகினோம் என்றாலும், எங்கள் காதல் எல்லோரிடமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. 

அவளின் அக்கா காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த அவள் அப்பா, அவளை பள்ளியை விட்டு நிறுத்தி விட்டார். அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதே கிடையாது.

என் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டு அவளை மீண்டும் படிக்க அழைத்து வர என் நண்பர்களும் ஆசிரியர்களும் எடுத்த முயற்சிகள் தோற்க, நான் அவளை சந்திக்கவே முடியாமல் போனது.

நினைவுகளில் இருந்து மீண்டு, பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்தேன். அந்த பள்ளி வளாகம் முழுவதும் நான் பார்க்கின்ற உருவங்கள் எல்லாமும் அவளாகவே தெரிந்தது. நான் அந்த நிழல்களில் இருந்தெல்லாம் மீண்டு, ஒரு வழியாய் எல்லாரையும் சமாளித்து விட்டு வெளிவந்தேன்.

நான் நாளை தான் என் ஊருக்குச் செல்வதாய் திட்டமிட்டிருந்தேன். ஆனால், இந்தக் குழப்பங்கள் காரணமாய் இன்றே செல்ல முடிவெடுத்து விட்டேன். 

********

என்னுடைய உறக்கம் ஆழமானதாக இருந்தாலும், எண்ணங்கள் விழித்தபடிதான் இருந்தன. அன்றைக்கு நடந்த நிகழ்வுகள் எனக்குள்ளே படம் போல ஒடிக்கொண்டிருந்தது.

என்னுடைய வகுப்பில் ஆண்கள் யாரும் இல்லை. அனைவரும் பெண்கள் தான். என் விஷயத்தைப் பொருத்தவரை அவர்கள் மொத்தம் இரண்டே இரண்டு பிரிவுகளாக இருந்தனர். ஒரு பிரிவினர் என் ரசிகைகள். நான் என்ன செய்தாலும் ஆஹா ஓஹோ என்று புகழ்வதோடு மட்டுமல்லாமல் எனக்கே தெரியாத விஷயங்களையெல்லாம்  நான் செய்ததாகச் சொல்லி என்னை துதிபாடுபவர்கள். இன்னொரு பிரிவினர் இதற்கு நேர் எதிர் . அவர்களுக்கு என்னை சுத்தமாகப் பிடிக்காது.

என்னை பிடிக்காதவர்களுக்கு என்னை ஏன் பிடிக்கவில்லை என நான் வியப்பதுண்டு. ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது என் மீது அவர்கள் கொள்ளும்  பொறாமை. அவர்கள் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத விஷயங்களை நான் வெகு சுலபமாகச் செய்கிறேன் என்கிற பொறாமை. அதற்காக என் சுபாவத்தை நான் மாற்றிக் கொள்ள முடியாது.

இந்த இரண்டு பிரிவினரும் ஒற்றுமையாக இருப்பது ஒரே ஒரு விஷயத்தில் தான். ஊர்க்கதைகளை பேசுவது என்றால் இரண்டு பேரும் கூடி விடுவார்கள். காதல் விசயங்கள், கள்ளத் தொடர்புகள், புறம் பேசுதல், இப்படி எண்ணற்ற விஷயங்களை கூடிப் பகிர்ந்து கொள்வார்கள். எனக்கு அதற்கான நேரமும் இல்லை, அது போன்ற விஷயங்களில் ஈடுபாடும் இல்லை.

ஆனால் இன்று இவர்கள் பேசுகிற உடல் மொழியையும்  சைகைகளையும் பார்த்தால் இவர்கள் என்னைப் பற்றி புரளி பேசுவது போலல்லவா தெரிகிறது. என்னைப் பற்றி புரளி பேச என்ன இருக்கிறது? நேற்று தானே என்னை இவர்கள் பாராட்டும் நிகழ்வு நடந்தது. அதற்குள் புரளியா?

நான் புரளிகளில் பொதுவாக கவனம் செலுத்துவதில்லை என்றாலும் புரளி என்னைப் பற்றியதாக இருக்கும் பட்சத்தில்  நான் அதை தெரிந்து கொண்டு தானே ஆக வேண்டும் தவறு என் மீது ஏதேனும் இருந்தால் திருத்திக் கொள்ளலாம் அல்லவா? அதனால் தான் நான் அதைப் பற்றி தெரிந்து கொள்ள என் தோழியை கேட்டேன். அவள் நீண்ட தயக்கத்துக்குப் பின் சொன்ன விஷயங்கள் எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

என்னைப் பாராட்டிப் பேசிய விழாவின் தலைவரைப் பற்றிய புரளி அது. அவர் ஒரு பெண் பித்தராம். நிறைய பெண்களை தன் வசப்படுத்தியவராம். தான் புள்ளி வைத்த பெண்களை தன் வசப்படுத்த எந்த எல்லைக்கும் போவாராம். எவ்வளவு கீழேயும் இறங்குவாராம். நேற்றைக்குக் கூட பல பேரை உற்று நோக்கியவாறு இருந்தாராம். அவர் எனக்கு மாலை போட்டு பாராட்டியதன் மூலம் எனக்கு புள்ளி வைத்து விட்டாராம். அதை உண்மையாக்கும் விதத்தில் நேற்று என்னைத் தேடி என் ஊருக்கே வந்து விட்டாராம்.

என் ஊருக்குள் சில வயதான பெண்கள் பேசுவதை இவர்கள் கேட்டார்களாம். உண்மையில் அவரின் சொந்த ஊரே எங்கள் ஊர் தான் என்றும், நிறைய பெண்களின் வாழ்வில் விளையாடியதால் ஊரை விட்டு துரத்தப்பட்டார் என்றும், இன்றைக்கு அவர் பெரிய மனிதன் என்பதால் அவரை யாரும் தடுக்க முடியவில்லை எனவும் பேசிக் கொள்கிறார்களாம்.

இதை அவள் சொல்லச் சொல்ல என் நினைவுகள் நேற்றைய விஷயங்களோடு பொருத்திப் பார்த்தது. 'சண்டாளன் வந்துட்டானே' என்று யாரைச் சொன்னார்கள் எனவும் புரிந்தது. என்னை ஏன் அடித்தார்கள் எனவும் புரிந்தது. ஆனால் இதில் நான் என்ன தவறு செய்தேன் என்பது தான் புரியவில்லை. 'சண்டாளியே வந்து பொறந்திருக்கா' என்று அவர்கள் பேசிக் கொண்டதில் சண்டாளி யாரென்று தெரிந்தால் இதற்கான விடை கிடைத்து விடும்.

என்னுடைய தோழி இன்னமும் எதையோ மறைப்பதை அவளது உடல் மொழி உறுதிப்படுத்தினாலும், அவள் அதற்கு மேல் தனக்கு எதுவும் தெரியாது என சத்தியம் செய்தாள்.

என் மனப்படக் காட்சிகள் மெதுவாக மறைந்து திரை கருமையானது. ஆழ்ந்த தூக்கத்தில் மூச்சினை முழுவதுமாய் உள்வாங்கி வெளிவிடுவதைக் கூட என்னால் உணர முடிந்தது. இப்போது திரையில் ஒர் அசைவு தெரிந்தது. உருவமும் அருவமும் இல்லாத ஏதோ ஒன்று எனக்குத் தெரிந்தது. உருவமில்லா எந்த ஒன்றையும் பார்க்க முடியாது அல்லவா, ஆனால் என்னால் அதனை பார்க்க முடிந்தது. ஆனால் அதன் உருவம் இன்னதென்று வரையறுக்க முடியாத ஒன்றாக இருந்தது.

அது மெதுவாக என்னை பெயர் சொல்லி அழைத்தது. நான் அதற்குப் பதில் சொல்ல முடியாத அளவுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். ஆனால் எனக்குள் இருந்து ஏதோ ஒன்று என்னை விட்டு வெளியேறுவதையும், வெளியேறிப் போய் அதன் அருகில் நிற்பதையும் என்னால் உணராமல் இருக்க முடியவில்லை. அவையிரண்டும் வெகு நாள் பழகியவை போல ஒன்றுக்கொன்று அருகில் அமர்ந்து பேசத் தொடங்கி விட்டன.

" இவளைப் பார்த்தால் உனக்குப் பாவமாகத் தெரியவில்லையா" என்று என்னுடையது கேட்டது.

"பாவம்தான். அதனால் தான் அவளுக்குச் சில விஷயங்களைத் தெளிவாக்குவதற்காக வந்திருக்கிறேன்."

"முதலில் நீ யாரென தெரிந்து கொள்ளலாமா?"

"நான் யாரா? நான் தான் அவள் . அவள் தான் நான் "

"புரியவில்லை"

"நான் அவளின் முற்பிறவி. அதிலே நான் அவளது அப்பாவின் மனைவி "

" அம்மாவா?"

" முட்டாளே, அப்பாவின் மனைவி அம்மாவாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? நான் அவளது அப்பாவின் முதல் தாரம். அவளது அம்மா இளையவள் "

" அப்படியானால் சக்களத்தியின் வயிற்றில் மகளாய் வந்து பிறந்திருக்கிறாயா?"

" ஆமாம்."

" அப்போ அந்த சண்டாளி நீதானா?"

" நான் சண்டாளியல்ல. அவங்க தான் என்னை சண்டாளின்னு சொல்றாங்க"

" சரிதான். அதனால் தான் சக்களத்திய பழிவாங்க அவள் வயித்துல வந்து பொறந்தியாக்கும்"

" அப்படியெல்லாம் இல்லை. என் மனதில் உள்ள நிறைவேறாத ஆசைதான் என்னை மறுபடியும் பிறக்க வெச்சிருக்கு "

" அப்படி என்ன நிறைவேறாத ஆசை"

" அந்தச் சண்டாளனைச் சேர வேண்டும்"

அந்தக் கடைசி வாக்கியம் என் மண்டையில் பாராங்கல் கொண்டு தாக்கியது போன்ற வலியை ஏற்படுத்தியது. நான் திடுக்கிட்டு விழித்தேன்.

இன்று மாலை நான் மிகவும் வற்புறுத்திக் கேட்டதால் என் தோழி சொன்ன இரண்டு விஷயங்கள் எனக்கு அனிச்சையாய் நினைவுக்கு வந்தது. அந்த மனிதருக்கும் எனது அப்பாவின் முதல் மனைவிக்கும் இருந்த தொடர்பை ஊரில் இப்போது கிசுகிசுப்பதாய் அவள் சொன்னது தான் அதிலே முதலாவது.

அவள் சொன்னதற்கும் இப்போது நடந்த நிகழ்வுக்கும் சம்மந்தம் இருக்கிறதை உணர்ந்தேன். 'அந்த சண்டாளனை சேரத் தான் நான் மறுவறவி எடுத்திருக்கிறேன்' என்றல்லவா அவள் சொன்னாள். அதனால் தான் நான் அவளைப் போலவே இருக்கிறேனா? அதனால் தான் என்னை இவர்களுக்குப் பிடிக்கவில்லையா?

 இவர்களெல்லாம் சொல்வது போல் அவள் அவ்வளவு மோசமானவளா? அவள் மோசமானவள் என்றால் அவளின் மறுபிறவியான (அவள் சொல்வது போல) நானும் மோசமானவள் தானோ?

இவர்களைக் கேட்டால் என்னையும் மோசமானவள் என்று தானே சொல்வார்கள். நான் ஏன் இவர்கள் பார்வையில் மோசமானேன். மோசமானவள் போல பிறந்ததாலா? நான் மோசமானவள் என்று சொல்லச் சொல்ல அதையே நான் உண்மையாக்க வேண்டும் என்று தானே அவர்களிடம் அப்படி நடந்து கொள்கிறேன்.

அப்படித்தான் இவர்கள் அவர்களையும் சொல்வார்களோ? அவர்களிடம் கேட்டால் தான் அவர்கள் தரப்பு நியாயம் தெரியும். யார் அவர்களிடம் கேட்பது? அவர்களைக் கேட்க வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கென்ன?

ஆனால், என் தோழி சொன்ன இரண்டாவது விஷயம் என்னைப் பற்றியது அல்லவா? அதைப் பற்றி நான் தீவிரமாய்ச் சிந்திக்க வேண்டும். இவர்கள் என் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாமே? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

பெண் பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்துவது என்பது எங்கள் கிராமத்தில் இயல்பான ஒன்று தான். எங்களுக்கு முந்தைய தலைமுறைக்கு படிப்பே கிடையாது என்னும் போது, கிடைத்த அரைகுறை படிப்பு போதும் என நினைப்பதா? அல்லது படிப்பைத் தொடர போராடுவதா?

சில பெண் பிள்ளைகள் தங்கள் முட்டாள்தனத்தினால்  அவசரப்பட்டு,  காதல் விஷயங்களில் சிக்கித் தங்கள் வாழ்வை பாழாக்கிக் கொள்வதால், எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளையின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்ய நினைப்பது தவறில்லை. ஆனால் அங்கே அந்தப் பெண்ணின் விருப்பம் என்ன என்பதை எத்தனைப் பேர் கேட்கிறார்கள்?

நான் இதுவரை யாரிடமும் காதல் வயப்பட்டதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று, எனக்கு அதில் விருப்பமில்லை. இரண்டாவது, நான் காதல் வயப்படுமளவு தகுதியான ஒரு ஆண் மகனை இன்னும் சந்திக்கவில்லை.

அப்படி இருக்கையில், யாரோ ஒரு மனிதர் நான் பேசிய பேச்சில் மயங்கி எனக்கு மாலை அணிவித்தார் என்ற ஒரே காரணத்துக்காக என்னை படிப்பதில் இருந்து நிறுத்தி விட்டு எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்வது என்ன நியாயம்?

அந்த மனிதர் மோசமானவராம், அவர் என் மீது கண் வைத்து விட்டாராம். அதனால் தான் எனக்கு மாலை அணிவித்தாராம். எனக்காகத் தான் இங்கே வந்து தங்கி இருக்கிறாராம். என்ன மடத்தனம்? அவன் கண் வைத்து விட்டால் நான் அவனிடம் மயங்கி விடுவேனா? அந்த ஆளை அன்றைக்கும் அதற்கு பின்னரும் நான் பார்த்தது கூடக் கிடையாது. அப்படி இருக்கையில் அவன் பின்னால் செல்ல நான் என்ன முட்டாளா?

என் பெரிய அன்னைக்கும் அவருக்குமான உறவு என்ன என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் இருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை, இவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்ய முடியாது.

இவர்களைப் பற்றியெல்லாம் ஆராய்வதை விட்டுவிட்டு நான் இந்தச் சூழலில் இருந்து எப்படி என்னைக் காப்பாற்றிக் கொள்வது என யோசிக்க வேண்டும். 

இவர்களின் மனதை மாற்ற முடியுமா? என்னால் முடியாது. ஏனென்றால், நான் சொல்வது எதையும் இவர்கள் காது கொடுத்துக் கூட கேட்பதில்லை. வேறு யார் மூலமாவது இவர்களிடம் எடுத்துச் சொல்லி முயற்சிக்கலாம் என்றால், அதுவும் முடியாது. ஏனென்றால், இவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல, பிடிவாதக்காரர்கள். யார் சொன்னாலும் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு வேளை எனது பெரியண்ணை உயிரோடு இருந்திருந்தால் அவர் என்னை நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார். அவர் இந்தச் சூழலில் இருந்து என்னைக் காத்திருப்பார். ஆனால், தன்னையே காத்துக் கொண்டு உயிர் வாழ முடியாத அவர் என்னை எப்படிக் காத்திருக்க முடியும்?

அதே நேரம், அவர் ஏன் என்னிடம் வந்து பேச வேண்டும். ஒரு வேளை அது கணவாகக் கூட இருக்கலாமோ . இருக்க முடியாது, ஏனென்றால், நான் கண் முழித்த போது எனக்குள் இருந்து பிரிந்த அது வேகமாய் எனக்குள் திரும்பியதையும், இன்னொன்று மறைந்து போனதையும், காணவும், உணரவும் முடிந்ததே. அது என்ன பிரமையா ?

பிரமையாகவே இருந்தாலும் அது சொன்ன விஷயம் சரிதானே? அவள் எனது முற்பிறவியாக இல்லாத பட்சத்தில் என் உருவமும் செயல்களும் ஏன் அவளைப் போல இருக்க வேண்டும்?

இவர்கள் என் சிறு வயதில் இருந்து அப்படிச் சொல்லிச் சொல்லியே என் ஆழ்மனதில் அது பதிந்து , நான் அவளைப் போலவே நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன் என்று கொண்டாலும், நான் அவளைப் பார்த்ததே இல்லையே. அவளின் உருவமும் செயல்களும் எப்படி இருக்கும் என்றே எனக்குத் தெரியாது அல்லவா.

அவள் சொன்ன விஷயங்களைக் கொஞ்சம் ஆராய்ந்தால் அதில் இன்னும் சில விஷயங்கள் இருக்கலாமோ என உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா? எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

முதலில் அவள் சொன்னது, சில விஷயங்களைத் தெளிவாக்க வந்துள்ளதாக . எதைத் தெளிவாக்க வந்தாள்? தான் தான் அந்தச் சண்டாளி என்பதையா? இருக்கலாம். அதனால் எனக்கு என்ன பயன்? 

'அவர்கள் தான் என்னைச் சண்டாளி எனச் சொல்கிறார்கள்' எனச் சொன்னதன் மூலம் அவள் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறுகிறாள். அவர்களுக்கு இவளை பிடிக்கவில்லை என்று. அது தான் எனக்குத் தெரியுமே. பிடிக்காதவர்களைத் தானே சண்டாளி எனச் சொல்வார்கள்.

அவர்கள் அவளைப் பற்றி என்ன சொன்னாலும் அவள் அவர்களைப் பற்றி எதுவும் தவறாகச் சொல்லவில்லை என்பதோடு, அவர்களைப் பழி வாங்க தான் வரவில்லை எனவும் சொல்கிறாள்.

தன்னுடைய நிறைவேறாத ஆசை அவனுடன் சேர்வதுதான் என்கிறாள். அப்படியானால் இவள் அவனைச் சேரவில்லை என்று தானே அர்த்தம். அவனுடன் அவள் தொடர்பில் இருந்தாள் என்பது உண்மையானால், அவளுடைய ஆசை, இன்னொரு பிறவி எடுத்து அவனை அடைய வேண்டும் என்கிற அளவுக்கு தீவிரமாய் இருக்காது. அப்படியென்றால்  இவர்கள் சொல்வது எல்லாம் பொய்தானே.

அவள் விஷயத்தில் அவர்கள் சொல்வது பொய்யானால் அவன் விஷயத்திலும் அவர்கள் சொல்வது என்ன உண்மையாகவா இருக்கப் போகிறது?

இது தான் அவள் எனக்குள் ஏற்படுத்த விரும்பிய தெளிவா? அப்படியெனில் 'அவனைத் தேடிப் போ. உன்னுடைய எல்லா பிரச்சினைகளுக்கும்  தீர்வு கிடைக்கும்' என்பது தான் அவள் கூறும் முடிவா? அவனுடன் சேரத் தான் மறுபடி பிறந்தேன் என்றால் அது தானே அர்த்தம்.

நான் இப்படி சிந்திப்பதில் தவறில்லை என்றாலும், இதை வைத்து நான் முடிவுகள் எடுக்க முடியாது. எதையும் அறிவுப் பூர்வமாக சிந்தித்து பழக்கப்பட்டவள் நான். எனவே, அறிவுப் பூர்வமான அணுகுமுறை தான் என்னுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்று நம்புபவள்.

என்னுடைய உள்ளுணர்வும், ஆழ்மனமும் என்னுடைய பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலைத் தரும். அந்த வகையில் தான் நான் முடிவுகளை எடுப்பேன்.

விடை தெரியா கேள்விகளை நான் உறங்கும் முன் என் ஆழ்மனதிடம் சொல்லி, நான் தூங்கப் போகும் போது எனது ஆழ்மனம் அதற்கான பதிலைத் தரும். அந்தப் பதில் ஒரு கனவாகவோ , மற்றவர்களின் வார்த்தைகள் வழியாகவோ எனக்குக் கிடைக்கும். அதை வைத்துத்தான் நான் முடிவுகள் எடுப்பது வழக்கம். இப்போது நான் எடுக்கக் கூடிய முடிவு என்னுடைய வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முடிவு.

இந்த முடிவினை எடுக்க நான் மனிதர்களை நம்புவதை விட என் ஆழ்மனதை நம்புவது மிகவும் சரி. அதனால் தான் நான் தூங்கும் முன் என் ஆழ்மனதிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தேன்.

மறுபிறவிகளில் எல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. நான் எனது அப்பாவின் முதல் மனைவியைப் போல இருப்பதும், அவளைப் போல நடந்து கொள்வதும் தற்செயல் . அதைப் பற்றிய நீண்ட ஆராய்ச்சி தேவையில்லை. ஆனால் அதே நேரம் ஆழ்மனம் எனது கேள்விகளுக்கான  பதிலைத் தரும் என்பது நிஜம். அந்த நிஜத்தின் மீது நம்பிக்கை வைத்து தான் முடிவுகளை எடுக்க முடியும்.

அந்த சண்டாளன் என்று சொல்லப்படுகிற மனிதனை அடைவது என்பது குறியீடு. அதன் பொருள் 'அவனை அடைய வேண்டும் என்றால் இவர்களை விட்டு விலக வேண்டும்' என்பதாக இருக்கலாம். இவர்களை விட்டு விலகு என்பது தான் தகவல். இதில் அந்த மனிதனுக்கு ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கிறது.

நான் திரும்பத் திரும்ப யோசித்த போதும் என்னுடைய ஆழ்மனத்தின் தகவல் ஒரே மாதிரி தான் தோன்றியது. முதலாவது, இவ்விடத்தை விட்டு நீங்குவது. இரண்டாவது, அந்த மனிதனை சந்திப்பது.

இங்கேயே இருப்பதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படப் போவதில்லை. என் ஆழ்மனம் வழி காட்டிய வழியில் சென்றால் எனக்கு நிச்சயம் நல்ல வழி கிடைக்கும் என நம்புகிறேன். ஒரு வேளை ஏதேனும் சிக்கல் வந்தால் .....? அதிலிருந்தும் என் ஆழ்மனம் என்னைக் காப்பாற்றும்.

நான் முடிவெடுத்து விட்டேன். நாளை இரவு இவர்களை விட்டு நீங்குவது. முடிந்தால் அந்த மனிதனை சந்திப்பது. மற்றபடி எனக்கு வேறெந்த திட்டமும் இல்லை. என் ஆழ்மனம் எனக்கு வழிகாட்டும்.

**********

சற்றே கண்ணயர்ந்தேன். கடந்த இரண்டு நாட்களில் இது தான் என்னுடைய முதல் தூக்கம். கண்களின் எரிச்சல் சற்றுக் குறைந்திருக்கிறது. யாரிடமாவது சற்று மனம் விட்டுப் பேசலாம் என்றால் அது போன்ற மனிதர்கள் யாரும் இங்கு இல்லை.

கண்களை மூடும் போதல்லாம்  அந்தக் காட்சிகள் கண் முன்னால் வந்து நின்று என்னை மிரட்டிக் கொண்டிருந்தது. அவளுடன் படித்த நாட்கள், அவளைத் தேடி அவள் ஊருக்குச் சென்ற நாட்கள், அதற்காக அவள் ஊர் இளைஞர்களால்  அடித்து போடப்பட்ட நாட்கள் என ஒவ்வொன்றாய் என் முன் காட்சிகளாய் வந்தன.

என் வாழ்வில் தொலைந்து போனவளை மீண்டும் நான் சந்தித்த போது ஏற்பட்ட வலியையும் வேதனையையும், என் உடம்பிலுள்ள ஒவ்வொரு செல்லும் சொல்லி கதறி அழும்.

மறுபடியும் நான் அவளைச் சந்தித்தது இன்னொருவன் மனைவியாக, அதுவும் என் ஊரிலேயே வாழ்க்கைப் பட்டவளாக .

நான் அவள் ஊர் இளைஞர்களால் தாக்கப்பட்டு மீண்டு வந்த போது, என் உடல் தேறிய வேகத்தில் எனது மனம் தேறவில்லை. அந்த நேரத்தில் எனக்கு பார்க்கிற பெண்களையெல்லாம் அவளைப் போலவே தெரியும். அதனால், அவர்களை அவள் என நினைத்து, பின்னால் சென்றிருக்கிறேன். அவர்கள் மிரண்டு ஒடியிருக்கிறார்கள்.

ஆற்றங்கரையில் அவள் என நினைத்து ஒரு பெண்ணைக் கையைப் பிடித்து நான் பேசப் போய், விஷயம் விபரீதமாகி விட்டது. அப்போதுதான் எனக்கு சித்தம் சற்று கலங்கி இருப்பதே என் அய்யாவிற்கு தெரிந்தது.

அதிலிருந்து குணமடைந்து விட்டேன் என நினைத்திருந்த போது தான் நான் அவளைப் பார்த்தேன். எனக்கு மறுபடியும் சித்தம் கலங்கி விட்டது எனத் தான் நினைத்தேன். ஆனால், அது தவறென்று ஒரிரு நாளில் தெரிந்தது. 

தினமும் காலையும் மாலையும் ஒரு முறையேனும்  அவளை நேருக்கு நேர் கடப்பது என்பது எவ்வளவு கொடுமை. முதலில் அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. என்னைக் கண்டதும் அதிர்ந்தாள். பிறகு ஒரு சாதாரன மனிதனைக் கடப்பது போலக் கடக்கும் அளவு நடிக்கப் பழகிக் கொண்டாள்.

அவள் நடிக்கிறாள் என்று எப்படி என்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றால், நானும் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். என்னுடைய நடிப்பு அவளுடயதை விட மிஞ்சும் வகையில் இருந்ததை என்னாலேயே உணர முடிந்தது.

நான் சித்தம் கலங்கி இருந்த நாட்களில் என்னைக்  கண்டு பதறி ஒடிய எங்கள் ஊர்ப் பெண்கள், எனது நிலையைக் கண்டு பரிதாபம் கொண்டு, நான் மீண்டு வந்ததும் என்னிடம் அன்பாகப் பழக ஆரம்பித்திருந்தனர்.

சகோதர முறை உள்ளவர்கள் வாஞ்சையாகவும், மற்றவர்கள் கேலியாகவும் பேசுவார்கள். எப்படியும், என்னைக் கடக்கிற எவரும் என்னுடன் பேசாமல் போவதில்லை.

அதில் சில பேர் யாரிடமும் பகிர முடியாத சில விஷயங்களை என்னுடன் பகிர்ந்து எனது ஆலோசனையை கேட்டுள்ளனர். எனது ஆலோசனை சிறப்பாக இருந்தது என்று கூறி மேலும் என்னிடம் அவர்கள் அன்பைக் காட்டினார்கள்.

அவர்கள் என் மீது அந்த அளவுக்கு அன்பைக் காட்டியதற்கு காரணம், நான் அவள் மீது வைத்திருந்த காதல் தான். 'ஒரு பெண்ணின் மீது எவ்வளவு பிரியம் வைத்திருந்தால், அவளுக்காக இந்த அளவுக்கு தன் உயிரையே இவன் பணயம் வைத்திருப்பான்' என எண்ணி வியந்தார்கள். எனது புண்பட்ட மனதிற்கு அவர்களது அன்பால் ஆறுதல் தந்தார்கள்.

ஆனால், அந்தப் பெண் தான் இந்த ஊருக்குப் புதியதாய் வாழ்க்கைப்பட்டு வந்த பெண் என்பதோ, அதனால் தான் நாங்கள் இருவரும் உள்ளுக்குள் குமுறிக் கொண்டு வெளியில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்றோ யாருக்கும் தெரியாது.

அவளுக்கு என் மீது நிச்சயமாய் கோபம் இருக்கும். ஒரு பெண்ணாய் அவளால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தாலும், ஒரு ஆண்மகனாய்  அவளை நான் மீட்க, அவளுடன் இணைய எந்த முயற்சியும் எடுக்கவில்லையே என்று. ஆனால் நான் அவளுக்காக எடுத்த முயற்சிகளில் மரணம் வரை சென்று மீண்டதும், அடுத்த முயற்சியை திட்டமிடுவதற்குள் அவளது திருமணம் முடிந்து விட்டதையும் நான் அவளுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பேன்.

எங்கள் ஊர்ப் பெண்கள்  காட்டிய அன்பைக் கண்டு பொறாமை கொண்ட இரண்டு தரப்பினர் இருந்தனர். ஒரு தரப்பினர் எங்கள் ஊர் இளைஞர்கள். அவர்களுடன் பழக வேண்டிய பெண்களைத் தடுக்கிறேன் என்பதால். இரண்டாவது தரப்பினர் எங்கள் ஊர்க் கிழவிகள் . அவர்களுக்கு பெண்கள் என்றாலே வேறு ஆண்களுடன் பேசக்கூடாது.

இந்த இரண்டு தரப்பினரும் என்னை ஒரு மன்மதனை போல் பிம்பம் உருவாக்கி புரளியைக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தனர். ஒரு வேளை அந்தப் புரளியும் அவள் காதை சென்று அடைந்திருக்கலாம்.

அந்தப் புரளி அவள் காதை அடைந்திருந்தால் அவள் என்ன நினைத்திருப்பாள்.  'நாம் இவனுடன் சேர இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, இவன் ஒரு மன்மதனைப் போல பல பெண்களுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறானே?' எனக்கு சிரிப்பு தான் வந்தது.

அவளிடம் நான் உண்மையைச் சொன்னால் தான் என்ன? வேண்டாம். நான் அவளுக்கு தவறானவனாகவே இருப்பதில் தவறில்லை. அவள் தன் கணவனோடு மகிழ்ச்சியாய் வாழ்ந்தால் அது போதும்.

நானும் அவளும் ஏன் ஒருவருக்கொருவர்  பேசிக் கொள்வதில்லை என, இந்தப் பெண்கள்  என்னிடம்  கேட்டால்  என்ன சொல்வது என்று நான் தயாராக இருந்தேன். "எனக்கு யாரிடமும் முதலில் பேசுவது என்றால் கூச்சம். அவங்க பேசிட்டாங்கன்னா அப்புறம் நான் நல்லா பேசுவேன்" எனக்குத் தெரியும், அவள் என்னிடம் பேசமாட்டாள்.

நான் எதிர்பார்த்தபடியே, 'நீங்க ரெண்டு பேரும் ஏன் ஒருத்தருக்கொருத்தர்  பேசிக்குறதேயல்ல' என்று, என்னிடம் அல்ல, அவளிடம் போய்க் கேட்டிருக்கிறார்கள்.

இரவு நேரத்தில் எனக்குப் பொதுவாக தாகம் எடுப்பதில்லை. ஆனால், இன்றைக்கு என்னுடைய நாக்கு வறண்டிருக்கிறது. சிறிது தண்ணீர் குடித்துக் கொண்டு எனக்கு அருகில் உள்ள ஜன்னலைத் திறக்கிறேன். என்னுடைய சுவாசம் வேகமாக இருக்கிறது. என்னால் அவளைப் பற்றி தொடர்ச்சியாகக் கூற முடியாது. இடையிடையே நான் சிறிது இடைவெளி விட வேண்டும். இல்லையென்றால் என்னாலேயே என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்டும்.

எவ்வளவு தான் நான் அவளைப் பற்றிக் கூறினாலும் அது முழுமை பெறாது என்பதால், நான் முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

அவளது இடைவிடாத மனக் காட்சிகளால், நான் இரவில் கூட தூங்க முடியவில்லை. பகலில் என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை. நான் சந்திக்க நினைத்த மனிதர்கள், நான் செல்ல திட்டமிட்டுருந்த இடங்கள் என எதுவும் என்னால் செய்ய முடியாமல் போக, அறைக்குள் முடங்கிக் கிடந்தேன். உடல் நலத்தை சாக்காகச் சொல்லி நான் உடனடியாய் கிளம்பி விட்டேன்.

மூன்றாம் வகுப்பு ரயில் பயணம், அதுவும் இரவு நேரப் பயணம் தான் எனது முதல் தேர்வு. என்னை நானே தனிமையில் பகுத்தாய்ந்து கொள்ள ஏற்படுத்திய பழக்கம் இது. மறுபடியும் நான் இந்த ஊருக்கு வருவேனா எனத் தெரியாது. ஆனால் இந்த ஊரின் நினைவுகள் என் நினைவை விட்டு என்றும் நீங்காது.

அன்றைக்கு நான் ஆற்றங்கரையில் தனிமையில் இருந்தேன். யாரோ வருகிற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தால், இவள். என்றைக்கும் இல்லாமல் அவள் என் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். நான் ஒரு கணம் திகைத்து திரும்பினேன்.

அவள் ஒடி வந்து என்னை அணைத்துக் கொண்டாள். நான் என்னையே மறந்தேன். என்னுடைய மனம், புலன் அனைத்தும் சில கணங்கள் நின்று விட்டன.

" என்னை மன்னிச்சுடு. நான் உன்ன தப்பா நெனச்சுட்டேன்" என கதறினாள்.

அந்த அணைப்பில் காமமோ, காதலோ இல்லை. அவளுக்குத் தேவை ஆறுதல். இந்த நிலையில் எந்தவொரு பெண்ணிற்கும் தேவை சிறு அணைப்பும் ஆறுதலுமே.

நான் அவளை லேசாக அணைத்து, ஆறுதல் சொன்னேன். அன்றைக்கு நடந்த அந்த நிகழ்வு, நான் இப்போது நினைத்தாலும் என்னை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது .

எவ்வளவு நேரம் அப்படி இருந்தோம் எனத் தெரியவில்லை. அன்றைக்கு அந்த நிலையிலிருந்து மீண்டு வீட்டுக்கு வந்தது வரை எனக்கு எதுவுமே நினைவிலில்லை.

அன்றைக்கு இரவு, இதே போன்ற மூன்றாம் வகுப்புப் பயணத்தில் கிளம்பியவன், இப்போதுதான் இந்த மண்ணை மிதித்தேன்.

அவள் மீது நான் கொண்டது காதலோ காமமோ அல்ல. அவளை முதன் முதலில் சந்தித்த போதே அவள் தான் எனக்குப் பொருத்தமானவள் என என் மனம் சொன்னது. அதை அவளது செயல்கள் நிரூபித்தன. நான் என்ன நினைக்கிறேன் என்பதை நான் சொல்லாமல் உணரும் ஆற்றலை அவள் பெற்றிருந்தாள். நான் ஒரு விஷயத்தை நினைத்தால் அதை அவள் செய்து முடித்திருப்பாள். அவள் பார்வையில் நானும் அப்படியே . நாங்கள் இருவரும் சேர்ந்தால் எங்களால் மிகப் பெரிய சாதனைகள் செய்ய முடியும் என நினைத்தேன். இந்தச் சமூகம் எங்கள் மீதும் எங்களது ஆசையின் மீதும் மாபெரும் வன்முறையை பிரயோகித்து விட்டது.

அதன் பிறகு அவளைப் பற்றி நான் எதுவும் கேள்விப்படக் கூட இல்லை. ஆனால் அவளைப் போன்ற ஒருத்தியை  என் வாழ்க்கையில் சந்தித்தேன். எந்த சமூகம் என்னிடம் இருந்து என்னை அறிந்தவளை பிரித்ததோ அதே சமூகம் அவளை விட சிறப்பான ஒருத்தியை எனக்கு வாழ்க்கைத் துணை ஆக்கியது.

என் வாழ்க்கையின் மிகக் கடினமான காலகட்டத்தில் உள்ளே வந்தவள் இவள்.  நான் உருவாக்கிய நிறுவணம் மூடும் தருவாயில் இருந்த போது, கடைசி முயற்சியாக சில விஷயங்களைச் செய்து கொண்டிருந்த போது, தற்காலிகமாக பணிக்கமர்த்தப்பட்டவள் தான் இவள். எங்கள் எல்லாரையும் விட எங்கள் நிறுவனத்தைக் காப்பாற்றப் பல மடங்கு உழைத்தவள்.

எனது நிறுவனம் இன்றைக்கு முன்னேறியதற்கு நான் இருபது சதவீதம் உழைத்திருந்தால், அவளது உழைப்போ எண்பது சதவீதம்.

என்னுடைய திறமைகளைக் கண்டறிந்து, அதை வெளிக்கொணர விழைபவள். நான் எதை நினைக்கிறேனோ அதை மட்டும் அவள் செயல்படுத்துவதில்லை, நான் அடுத்து என்ன நினைக்கப் போகிறேனோ அதையும் கண்டறிந்து செயல்படுத்துவாள்.

என்னுடைய வாழ்க்கையில் நான் தவறவிட்டவளுக்காக நான் செய்யக் கூடிய கைம்மாறு என்னவென்றால், அவளைப் போன்று குடும்பச் சூழலால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும். 

இதைப் பற்றி நான் நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். யாரிடமும் அது பற்றி நான் பேசாத போது, என் மனைவி அது சம்மந்தமான  ஒரு திட்டத்துடன் வந்தாள்.

திறமையிருந்தும், பெண் என்பதால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கும் பெண்களுக்கான ட்ரஸ்ட்டை ஆரம்பிக்கலாம் என்பதே அந்தத் திட்டம்.

அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, இன்றைக்கு மிகப் பெரிய நிலையில் வளர்ந்து, நிறைய பெண்களின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதைப் பற்றி நான் பெருமிதத்துடன் எண்ணிக் கொண்டிருந்த போது தான் , நான் அந்த மனிதரைச் சந்தித்தேன். அவருடன் ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் அவளின் சாயலில் இருந்தாள்.

கருத்துகள்