கைவளையல் சத்தமிட

கைவளையல் சத்தமிட

கால்விரலோ கோலமிட

காத்திருந்தேன் மாமனுக்கு

வேறுதுணை யாரெனக்கு


ராப்பொழுது தூக்கமில்ல

எப்பொழுதும் ஏக்கமுள்ள

எம்மனச புரிஞ்சிக்கிட

மாமனுக்கு நேரமில்ல


அத்திப்பழம் போலிருக்கும்

அத்தமவ ரத்தினத்த

அள்ளி அனைச்சிடத்தான்

அத்தானுக்கு அன்புமில்ல


ஒடிஒடி ஒழைக்கத்தான்

ஒடம்புக்குள்ள தெம்பிருக்கு

என்னப்போல பொம்பளைக்கு

ஒடம்புக்குள்ள மனசெதுக்கு


ஒறவுவிட்டுப் போகாதுன்னு

ஒறவுக்குள்ள பொண்ணெடுத்து

எனக்கெனவே ஆனமச்சான்

எ(ன்) உசுரு உனக்குத்தான்


ஊருக்கெல்லாம் உத்தமனா

இருக்குறது தப்பில்ல

எனக்குங்கூட மனசிருக்கு

ஏ(ன்) ஒனக்கு தெரியல்ல


ஒனக்குத்தான் வாக்கப்பட்டேன்

வேறென்ன நா(ன்)கண்டேன்

ஒருவார்த்த எனப்பாத்து

சிரிச்சுநீயும் பேசறியா


படுக்கத்தா(ன்) நா(ன்)வேணும்

பசிச்சாலும் நா(ன்) வேணும் - உ(ன்)

ஒறவுக்கெல்லாம் வக்கனையா

வடிச்சுப்போட நா(ன்) வேணும்


எடுத்த எடுப்புக்கெல்லா(ம்)

எரிஞ்சுவிழ நா(ன்) வேணும்

வயக்காட்டு வேலைக்கெல்லாம்

ராப்பகலாநா(ன்) வேணும்


எனக்கன்ன வேணுன்னு

என்னைக்காச்சும் கேட்டதுண்டா

ஒடம்புக்கு முடியலன்னா

ஒருநாளும் ஓய்வுண்டா


இத்தனையும் கேக்கனுன்னு

ஒவ்வொருநாள் நெனச்சதுண்டு

மனசுக்குள்ள கோவமாக

வருத்தப்பட்டு அழுததுண்டு


எத்தனதான் இருந்தாலும்

அத்தனையும் மறந்துவிடும் - எ(ன்) மாமனுடன் இருக்கையிலே

கவலையெல்லாம் பறந்துபோவும்


கைவளையல் சத்தமிட

கால்விரலும் கோலமிட

காத்திருக்கேன் மாமனுக்கு

வேறுதுணை யாரெனக்கு





கருத்துகள்